காமராஜர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
குமாரசாமி காமராஜர் | |
| |
---|---|
பதவியில் ஏப்ரல் 13, 1954 – அக்டோபர் 2, 1963 | |
முன்னவர் | சி. இராஜகோபாலாச்சாரி |
பின்வந்தவர் | எம். பக்தவத்சலம் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| |
பிறப்பு | ஜூலை 15 1903 விருதுநகர் சென்னை மாகாணம் இந்தியா |
இறப்பு | அக்டோபர் 2 1975 (அகவை 72) சென்னை தமிழ்நாடு |
தேசியம் | தமிழர் |
குமாரசாமி காமராஜ் பொதுவாக காமராஜர் அல்லது காமராசர் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு் அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராஜ் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிறார். இவர் இறந்த பிறகு 1976 இல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப் பட்டது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பொருளடக்கம்[மறை] |
தொடக்ககால வாழ்க்கை
காமராஜர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவார்கள். அவருக்கு குல தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை "ராஜா" என்றே அழைத்து வந்தாள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது.
தனது பள்ளி படிப்பை க்ஷத்ரிய வித்யா சாலா பள்ளியில் துவங்கினார். படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டு கொடுக்கும் மனதுடனும் விளங்கினார். மிகவும் சிறிய வயதிலேயே தந்தையை இழக்கும் துர்பாக்கிய நிலை காமராஜருக்கு ஏற்பட்டது. அவருக்கு ஆறுவயதாக இருந்த போது தந்தை குமாரசாமி நாடார் மறைவெய்திவிட்டார். ஆறாம் வகுப்பு வரையே படித்தார் இவர்.
சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். - இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.
சிறை வாழ்க்கையும் படிப்பும்
பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டதும் காமராஜர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார். அங்கிருக்கும் போது பெ. வரதராஜுலு நாயுடு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆரவம் காட்டினார். தன்னுடைய 16ஆம் வயதில் தன்னைக் காங்கிரஸின் உறுப்பினராகவே ஆக்கிக் கொண்டார்.
ராஜாஜியின் தலைமையில் 1930 மார்ச் மாதம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டார். அதற்காகக் காமராஜ் கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அடுத்த ஆண்டு காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை ஆனார். விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் கைதாகி, சேலம் டாக்டர் பெ. வரதராஜுலு நாயுடு அவர்களின் வாத திறமையால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை ஆனார். 1940-ல் மீண்டும் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருக்கும் போதே விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின் விடுதலை ஆனதும் நேராகச் சென்று தன் பதவியை ராஜினாமா செய்தார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது. மீண்டும் 1942-ல் ஆகஸ்ட் புரட்சி நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் தண்டனையாக அமராவதி சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இந்த மாதிரியான சிறை வாழ்க்கைகளின் போது தான் காமராஜ் சுயமாகப் படித்துத் தன் கல்விஅறிவை வளர்த்துக் கொண்டார்.
அரசியல் குரு
மிகச் சிறந்த பேச்சாளரும் சிறந்த நாடாளுமன்ற வாதியும் ஆன சத்தியமூர்த்தி அவர்களைத் தான் காமராஜர் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். 1936-ல்சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரான போது காமராஜரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரஸ் கட்சி நல்ல வளர்ச்சி கண்டு தேர்தல்களில் பெருவெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டு காமராஜர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்கு தான் தேசியக் கொடியை ஏற்றினார். அதேபோல் முதலமைச்சர் ஆனபோதும் முதலில்சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவர் படத்துக்கு மாலை அணிவித்து விட்டுத் தான் தன் பணியைத் தொடங்கினார்.
தமிழக அரசியல்
தமிழக ஆட்சிப் பொறுப்பு
1953-க்குப் பிறகு சக்ரவர்த்தி ராஜாஜிக்கு அவர் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தால் அதிக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்த நேரம். காமராஜர் ஆட்சித் தலைமைப் பொறுப்புக்கு வரத் தயங்கியதற்கு அவருக்கிருந்த மொழிவளம் குறித்த தாழ்வுணர்ச்சி ஒரு முக்கிய காரணம். (அப்போது தமிழகம் சென்னை ராஜ்ஜியமாக ஆந்திராவின் பெரும்பகுதி, கர்நாடகாவின் சில பகுதிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டிருந்தது)
குலக்கல்வித் திட்டத்தால் ராஜாஜியின் செல்வாக்கு வேகமாகக் கீழிறங்கிக் கொண்டிருக்க, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பின் காரணமாக (அக்டோபர் 1, 1953-ல் ஆந்திரா பிறந்து விட்டது) தமிழ்நாடும் சுருங்கிப் போக, காங்கிரஸின் உள்ளேயே ராஜாஜிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பி விட்டது. நிலைமை அறிந்த கட்சி மேலிடம், தமிழக அளவில் தீர்மானித்துக் கொள்ள அனுமதி வழங்கி விட்டது. ராஜாஜி தான் அவமானப்படுவதைத் தவிர்க்க, ‘எனக்கு எதிராகக் கட்சியில் யாரும் தீர்மானம் கொண்டு வர வேண்டாம்; நானே விலகிக் கொள்கிறேன்’ என்று அறிவித்து விட்டாலும் தன் இடத்திற்குத் தன்னுடைய முக்கிய ஆதரவாளரான சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்த பின் வேலை செய்தார். அவருடைய இன்னொரு முக்கிய ஆதரவாளரான எம். பக்தவத்சலம் அதனை முன்மொழிந்தார்.
ஆனால் கட்சிசட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராஜர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதுதான், காமராஜர் தமிழக முதல்வராக 1953 தமிழ்ப்புத்தாண்டு அன்று முதல்வரானதன் பின்னணி.
வித்தியாசமான அமைச்சரவை
காமராஜர் அமைச்சரவை அமைத்த விதத்தில் சில நுட்பமான விஷயங்கள் உள்ளன:
- மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே (8 பேர்)அமைச்சர்கள் இருந்தனர்.
- தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலம் இருவரையுமே அமைச்சரவையில் சேர்த்திருந்தார்.
- அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த இன்னும் முக்கிய இருவர், ராமசாமி படையாச்சி, மாணிக்க வேலு நாயக்கர் ஆகியோர். இவர்கள் இருவரும் காங்கிரசை எதிர்த்துப் போட்டியிட்டு திமுக ஆதரவோடு வென்றவர்கள். (1952 தேர்தலில் திமுக போட்டியிடவில்லை என்றாலும் அது சில வேட்பாளர்களை வெளிப்படையாக ஆதரித்தது. திமுகவின் திராவிட நாடு கொள்கையை ஆதரிக்கிறேன்; சட்டமன்றத்தில் திமுக-வின் கொள்கைகளை எதிரொலிப்பேன்; திமுக வெளியிடும் திட்டங்களுக்கு ஆதரவு பெருக்கும் வகையில் சட்ட மன்றத்தில் பணியாற்றுவேன் என்கிற நிபந்தனைகளுக்கு எழுத்து பூர்வமாகக் கையெழுத்திட்டுத் தருபவர்களுக்கு ஆதரவு அளித்தது திமுக. அப்படிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்று எம் எல் ஏ ஆனவர்கள் இந்த இருவரும்.)
- அமைச்சரவையின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், பி.பரமேஸ்வரன் என்கிற அமைச்சர். அவருக்குத் தரப்பட்டிருந்த பொறுப்பு, தாழ்த்தப்பட்டோர் நலம் மற்றும் அறநிலையத் துறை. (தாழ்த்தப்பட்டோர் கோவில்களில் நுழையவே எதிர்ப்பும் அனுமதி இன்மையும் இருந்த நாட்களில், தாழ்த்தப்பட்ட ஒருவர் அமைச்சர் என்கிற போர்வையில் போகும் போது பூரண கும்ப மரியாதை தரப்படுவதற்கு, ஆர்ப்பாட்டமில்லாமல் காமராஜர் செய்த ஒரு புரட்சி இது).
முதலமைச்சராக ஆற்றிய பணிகள்
ராஜாஜி கொண்டு வந்திருந்த 'குலக்கல்வித் திட்டத்'தினைக் கைவிட்டதும், அவர் காலத்தில் நிதிநிலையைக் காரணம் காட்டி மூடப்பட்டிருந்த 6000 பள்ளிகளைத் திறந்ததும், மேற்கொண்டு 12000 புதிய பள்ளிகளைத் தோற்றுவித்ததும் காமராஜரின் தலைசிறந்த பணிகளாகும். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாக பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது. (வெள்ளையர் காலத்தில் இது 7 சதவீதமாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180-லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (IIT) தொடங்கப் பட்டது.
காமராஜ் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும்.
அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:
- பாரத கனரக மின் நிறுவனம் (BHEL)
- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC)
- மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)
- இரயில் பெட்டி தொழிற்சாலை (ICF)
- நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
- கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
- மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டங்களும் காமராஜரால் ஏற்படுத்தப்பட்டவை.
அகிலஇந்திய காங்கிரஸ் தலைமை
மூன்று முறை (1954-57, 1957-62, 1962-63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராஜர் பதவியை விட தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாக கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பி கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் 'காமராஜர் திட்டம்' ஆகும். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டு கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து (02.10.1963) பொறுப்பினை பக்தவத்சலம் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு டெல்லி சென்றார் காமராஜர். அக்டோபர் 9-ஆம் நாள் அகில இந்தியக் காங்கிரஸின் தலைவர் ஆனார். லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், எஸ்.கே.பாட்டீல், ஜெகஜீவன்ராம் போன்றோர் அவ்வாறு பதவி துறந்தவர்களில் முக்கியமானவர்கள்.
அகில இந்திய அளவில் காமராஜாரின் செல்வாக்கு கட்சியினரிடம் மரியாதைக்குரியதாக இருந்தது. அதனாலேயே 1964-ல் ஜவஹர்லால் நேரு மரணமடைந்தவுடன் இந்தியாவின் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி அவர்களை முன்மொழிந்து காமராஜர் சொன்ன கருத்தினை அனைவரும் ஏற்றனர். 1966-ல் லால் பகதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தின் போது ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையின் போது இந்திரா காந்தியை பிரதமராக வரச் செய்ததில் காமராஜருக்குக் கணிசமான பங்கு இருந்தது.
இறுதிக் காலம்
காமராஜருக்கு இந்திராகாந்தியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக காங்கிரஸ் கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது. காமராஜரின் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரஸ் தமிழக அளவில் செல்வாக்குடன் திகழ்ந்தது. ஆனாலும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் அபரிமித வளர்ச்சியால் அதன் பலம் குன்றிப் போக காமராஜர் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தமிழக அளவில் சுருக்கிக் கொண்டார். தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி வந்தார். இந்திராகாந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராஜரும் ஒருவர். இந்தியாவின் அரசியல் போக்கு குறித்து மிகுந்த அதிருப்தியும் கவலையும் கொண்டிருந்த நிலையில் 1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) உறக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது.
திரைப்படங்கள்
2004-ஆம் ஆண்டு காமராஜ் என்கிற பெயரில் அவருடைய வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கும் திரைப்படம் வெளியானது. அதன் ஆங்கில மொழியாக்க குறுந்தகடு 2007-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
காமராஜ் பற்றிய ஏனையவரது கருத்துக்கள்
- "திறமை, நல்லாட்சி, இவைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ஒரு அரசாங்கத்திற்குத் தலைவர் என்ற முறையில் காமராஜர் சென்னை முதல்_அமைச்சராக இருக்கிறார். மக்களுக்கு மேலும் மேலும் தொண்டுபுரிய அவர் நீண்ட காலம் வாழ்வார் என நான் நம்புகிறேன். நேரு
- “சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்கு காரணம் நமது காமராஜர்தான். ஊர்தோறும் சாரம் தொழில்வளம் ஏற்பட்டுள்ளன. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தை சாதித்த நமது காமராஜரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா?"- தந்தை பெரியார்.
- “காமராஜ் தோற்றத்தில் மட்டுமின்றி மதிநுட்பத்திலும் மக்களையும், அவர்களுடைய பிரச்சினகளையும் புரிந்து கொள்வதிலும் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் நாட்டம் மிகுந்த தலைவராக விளங்குகிறார்.”-இந்திரா காந்தி
- "சத்தியமூர்த்திக்கு பின்னர் காமராஜை நான் பிள்ளையாக பார்த்திருக்கிறேன். நான் இன்னும் அப்படியே இருக்கிறேன். அவர் உயர்ந்திருக்கிறார். அன்று அவரை நான் குனிந்து பார்த்தேன். இன்று அண்ணாந்து பார்க்கிறேன்."- சிதம்பரம் சுப்ரமண்யம்
- "காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி"- எம். ஜி. இராமச்சந்திரன்
- "தியாகச் சுடர், தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றவர்."-கலைஞர் கருணாநிதி
- "காமராஜர் அரசு பிற மாநிலங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. முற்போக்கு அரசியலிலும், ஸ்திரமான சர்க்காரிலும், நிர்வாகத்திறமையிலும் தமிழகம் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது."-மத்திய உணவு அமைச்சர் ஏ.எம்.தாமஸ்
- “தனது பலவித கஷ்டங்களையும் பொருட்படுத்தாது, சதா காலமும் நாட்டின் நலன்களிலே ஈடுபட்டுள்ள உள்ளத்தைப் பெற்றவரே சகல தர்மங்களையும், நிதிகளையும் நன்குணர்ந்தவரே காமராஜ், காமராஜ் மகாபுருஷர்.”-காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி
No comments:
Post a Comment