Saturday, June 16, 2012

சிறை என்னச் செய்யுமடா?



சிறை என்னச் செய்யுமடா?

சாராய விற்பனை செய்தவர்கள் இப்போது கல்விக்கூடம் நடத்த வந்துவிட்டார்கள்!
கல்விக்கூடங்களைத் திறக்க வேண்டிய அரசு, சாராயம் விற்றுக் கொண்டிருக்கிறது!!
இதுதான் இந்திய சனநாயக கூத்துக்கு ஒரு சோற்றுப் பதம்!
குருதி குடித்த இராசபக்சேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு!
பக்கவாதத்தால் துடித்து பண்டுவம் தேடிவந்த பார்வதியம்மாளை தரையிறங்கவிடாமலேயே திருப்பி அனுப்புகிறார்கள்! 

பார்வதியம்மாள் ஈழ தேவனைத் தன் கருவறையில் சுமந்த பாக்கியவதி, அவ்வளவுதான் குற்றம்! இதுதான் காந்தி தேசத்தின் கடுக்காய்ப் பத்தினித்தனம்! இங்கு எல்லாமே தலைகீழ்தான்!
மன்னராட்சி முடிந்து விட்டது என்கிறார்கள்! சோனியாவின் பேரனுக்கு பிள்ளை பிறந்துவிட்டதா? என்று காங்கிரசுத் தொண்டர்கள் அடுத்த தலைவருக்காக பிரசவஅறை வாயிலில் காத்துக் கிடக்கிறார்கள்! கருணாநிதியின் பேராண்டிகளுக்கு கிடைக்கிற மரியாதை தி.மு.க.வில் அறிஞர்களுக்கும் ஆற்றல் மறவர்களுக்கும் கிடைக்காது! கோவைத் தமிழ் மாநாட்டில் வா.மு. சேதுராமன் கால்கடுக்க நிற்கிறார். அவரது மீசையின் அளவுகூட வளராத கருணாநிதி வீட்டுக் குஞ்சுகளும் பிஞ்சுகளும் இருக்கைகளில் இறுக்கமாக உட்கார்ந்திருக்கிறார்கள்! அன்பழகன், துரைமுருகன் போன்ற தலைசிறந்த “அறிவாளிகளுக்கோ” எப்போதுமே 23ம் புலிக்கேசியின் புகழ்பாடும் ஓமணாட்டிப் புலவர்களிள் நிலைதான்!
சீமானைச் சிறைப்படுத்தியிருப்பது என்பது ஏற்கெனவே சிறுமைப்பட்டுக் கிடக்கும் சனநாயகத்தின் மீது தமிழகஅரசு மேலும் “நீர்”பாய்ச்சியிருக்கிறது! (சிறுநீர் என்று வாசித்துத் தொலைத்துவிடாதீர்கள்!) என்றுதான் எடுத்துக் கொள்ளமுடியும்! உரிமைக்குக் குரல் கொடுக்கிறவர்களுக்கும், விடுதலைக்கு வழி வகுக்கிறவர்களுக்கும் ஆண்டை அரசுகள், காலாகாலமாக அடக்குமுறைகளை ஏவியும் கொடுஞ்சிறைகளைப் பரிசாக்கியுமே வந்திருக்கின்றன! வ.உ.சி.யைச் செக்கிழுக்க வைத்தது! ஆனால் கயவன் ஆஷ் துரையைப் பாதுகாத்தது! பத்து அல்கொய்தாப் போராளிகளைத் தேடி ஆப்கான் மலைகளில் குண்டுகளை அள்ளித் தெளிக்கிறது அமெரிக்கா. பலநூறு பேரை போபாலிலிருந்து நேரே பரலோகத்திற்கு அனுப்பிவிட்ட ஆண்டர்சன்னை அதே நாடு பொத்திப் பாதுகாக்கிறது! காரணம் அவன் அமெரிக்கன். தன் இனம் தன் மக்கள் என்று வரும்போது மாந்த உரிமை, மற்றவர் உரிமை என்று எவனும் பார்ப்பது கிடையாது. ஆனால், இதிலும் இந்த நாடு தலைகீழ்தான்! 534 மீனவர்களை 25 ஆண்டுகால இடைவெளிக்குள் தொடர்ந்து சுட்டும், சுடாமலும் கொன்று குவித்த சிங்கள அரசை வலுவாக எதிர்த்து சாவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலாத பேடி அரசுகள், அதாவது திராவிட மற்றும் இந்திய அரசுகள் இன்று தங்களுக்குள் வாய்ச் சவடால் அடித்துக் கொண்டு, ஒருவருக்கொருவர் லாவணி பாடிக்கொண்டு அரசியல் சித்து விளையாடிக் கொண்டு கொல்லப்பட்ட கொடுமையை நரகல் ஊற்றி மூடப் பார்க்கிறார்கள். ஆனால், மானமுள்ள தமிழருக்கோ நெஞ்சு பதை பதைக்கிறது! இதில், ஈனத் திராவிடனுக்கும், திராவிடச்சிக்கும் ஓர்மை எங்கிருந்து பொத்துக்கொண்டு வரும்? ஏமாளித் தமிழனின் எதிர்பார்ப்பை என்னவென்று சொல்வது?
“இவன் தமிழனல்லன், திராவிடன், திராவிடன், திருடன், திருடன்” என்று உயிர் சோர்ந்து போகும் அளவிற்கு உச்சக் குரலில் பல்லாயிரம்முறை கத்திக் கத்திச் சொன்னபோதும் மதியாத தமிழ் நெஞ்சங்கள் இன்று உறவை இழந்து, பல்லாயிரம் உயிர்களை இழந்து, போர் மறவர் பலரை இழந்து, கண்ணீரில் கரைந்து, கனவுகளைக் கலைத்து, நனவுகளைக் காவுகொடுத்து மீனவர் பலரை இழந்து இறுதியில் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுத்தத் தமிழனைக் கொடுஞ்சிறையில் தள்ளி கொடுமை செய்யும்போதுதான் மெல்ல விழிக்கிறோம்! காலந் தாழ்த்தி வேதனையோடு விழிக்கிறோம்! விழிநீர் முட்ட, “திராவிடர்ஆட்சியில் தமிழர் வாழவும் முடியாது, பேசவும் முடியாது” என்று புலம்பிப் பலம்பி நொந்து அழுகிறோம்.
சாராயம் விற்று சம்பாதித்த காசை தேர்தலின் போது தமிழனின் கையில் திணித்து வெற்றி நங்கையின் கற்பைச் சூறையாடியவனாயிற்றே! கண்ணகி போன்ற உன் வீட்டுக் கற்புப் பெண்ணின் காவலுக்கு தமிழன் உன்னை நம்பி வைத்தால், எச்சில் காசை எண்ணி எடுத்துக் கொண்டு தேர்தலையேக் கற்பழிக்க விட்டுவிட்டாயே! இப்போது சனநாயகம் கற்பிழந்து கலையிழந்து நடுத்தெருவில் நாறுகிறது பார்! பத்துத் தேர்தலைப் பதம் பார்த்தவன், மொத்தத் தேர்தலையும் முழுங்க இப்போது போட்டுவிட்டான் திட்டம்! காவலனுக்குக் காசு! நொள்ளனும் கள்ளனும் கூட்டு! நாறப்போகுது நாடு!
ஒரு சேலை வாங்கினால் இன்னொரு சேலை இலவயம் என்று வணிகன் விளம்பரம் செய்கிறான். அதற்குப் பெயர் ஆடித் தள்ளுபடி என்கிறான்! நேற்று 100 ரூபாய்ககு விற்ற சேலையை இன்று 300 என்று விலை போட்டு மற்றொரு 100 ரூபாய்ச் சேலையை இலவயமாகக் கையில் திணித்து கமுக்கமாய் ஒரு 100யை அள்ளிக் கொண்டு போகிறான். இலவயச் சூழ்ச்சி இதுதான்! இழித்தவாயன், ஏமாளி, நுகர்வுவெறியர் ஆகியோர் இருக்கும்வரை வணிகனின் இலவயச் சூழ்ச்சிக்கு வெற்றிதானே! அரசியல்வாதி கற்றுக் கொண்டதும் அங்கிருந்துதான்! சாராயத்தில் சம்பாதிக்கிற கோடிக் கோடியான பணத்தை கிலுகிலுப்பை இலவயம் காட்டி விளம்பரம் தேடுகிறான். இறுதியில் சனநாயகத்தையும் மொத்தமாக விலைக்கு வாங்கிவிட்டான். வாக்கு ஒன்றுக்கு விலை இவ்வளவு என்று வெட்கமின்றி நிர்ணயிக்கிறான். சனநாயகத்தைப் பட்டப்பகலில் பச்சைப் படுகொலை செய்யும் வந்தேறிகளையும் களவாணிகளையும் தடுக்க எந்தச் சட்டம் பாய்ந்து கிளறப் போகிறது? திராவிடச் சூழ்ச்சியின் மொத்தச் சுருக்கமும் இதுதான்! “எப்படியாவது ஆட்சியைப் பிடி, அதிகாரத்தைத் தக்க வை! அதுவரைக்கும் பொய்யைச் சொல்! பிடித்தபின் நையப் புடை!” நம்பி நம்பிக் கெட்ட தமிழினமோ மாறி மாறி திராவிட வந்தேறிக¬ளுக்கே வாக்களித்து வந்திருக்கிறது! கருணாநிதியின் துணிச்சலோ அதிஉச்சம்! தமிழை வைத்தே தமிழர்களை ஏய்க்கிறார், ஏமாற்றுகிறார்! தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள இந்திக் கூட்டுக் குழுவுக்கு மனதார முட்டுக் கொடுக்கிறார். மறுபுறம் தமிழ்ச் செல்வன் மறைந்தால் கவிதை புனைகிறார். சிங்களப் படைகள் மீனவ மக்களைச் சுட்டுக் கொன்றால் வேடிக்கை பார்க்கிறார். மறுபுறம் வெகுண்டெழும் மக்களை ஒடுக்கச் சட்டம் கொண்டு வருகிறார். நண்பர்கள், நெருங்கியவர்கள் மறையும்போது, கண்ணீர்தான் வரும்! கவிதை வராது! கருணாநிதிக்கு அண்ணா இறந்தாலும் கவிதைதான், தமிழ்ச்செல்வன் இறந்தாலும் கவிதைதான்! கலைஞர் அல்லவா? கலையில் வல்லுனர் அல்லவா? ஏமாளிகள் இருக்கும்வரை ஏய்க்கிறவனுக்குப் பொற்காலம்தானே!
திராவிடம் இந்த மண்ணில் மயக்கத்தை விதைத்தே மக்களைக் காயடித்திருக்கிறது! அண்ணாவின் அடுக்குமொழிப் பேச்சில் மயங்கியவர்கள் உண்டு! ஆனால், கீழவெண்மணிப் படுகொலையின் மூலநாயகன் கோபால கிருட்டிண நாயுடுவைத் தண்டிக்காமல் தப்புவிக்க விட்டதும் அவருடைய அரசுதான்! “அடைந்தால் திராவிடநாடு அன்றேல் சுடுகாடு” என்று வசனம் பேசி மக்களுக்கு உசுப்பேற்றிய அண்ணா அவர்கள், பதவி வந்தபோது, “திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடுகிறோம்.. ஆனால், அதற்கான காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன” என்கிறார். பின் எதற்காகக் கைவிடுகிறார்? இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்களைச் சரிக்கட்ட கருணாநிதியை எழும்பூருக்கு அனுப்பி வைத்துச் சமரசம் செய்தவரும் அவரே! பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பது தவறு! பாவாணர் பசியோடுதான் இலக்கு தவறாமலும் மானம் இழக்காமலும் இருந்தார். பதவி என்று வந்தால் பத்தென்ன? பதினாரும் இவர்களுக்குப் பறக்கும்! “மானம் எங்களுக்கு வேட்டி போல, பதவி எங்களுக்குத் துண்டு போல” என்றார்கள்! ஆனால், திராவிடச் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் இவர்கள் எவருமே “வேட்டி” கட்டவேயில்லை!
பின்னர் கருணாநிதியின் காலம் வந்தது. திராவிடம் என்ற நச்சுப் பயிர் கொழுகொழுவென்று வளர்ந்தது இவரது காலத்தில்தான்! சாராயம் தமிழகத்தின்மீது திணிக்கப்பட்டது! திரைப்பட மாயை புகுத்தப்பட்டது! வன்முறைவழி அரசியல் அரங்கேறத் தொடங்கியது! “அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?” என்பது பராசக்தியில் கருணாநிதியின் திரைப்பட வசனம். ஆனால், மஞ்சள் துண்டு, சாத்திரம், சோதிடம் என்ற எல்லாப் பீடைகளும் புடைசூழ வாழ்கிறார். இவரது காலத்தில்தான் பிறங்கடை (வாரீசு) அரசியலால் நாடு நாறியது! பின்னர் இப்போது “அழகிரித்தனம்” என்ற தேர்தல் சித்து விளையாட்டினால் நொந்து அழிகிறது! திராவிட வளர்ச்சியின் மூலப்பொருள் இவைகள்தான்!
யூதனையும் மிஞ்சி வானுயர்ந்து நிற்கவேண்டிய தமிழரின் வாழ்வு இன்று சிதைந்து சின்னாபின்னமாகிக் கிடக்கிறது! தமிழரின் அறிவியலும் ஆற்றலும் விழலுக்கிரைத்த நீராகிப் போனது! தமிழரின் தன்மானமும் தனிச்சிறப்பும் ஒழிந்து போயின! மூன்று இலட்சத்திற்கும் மேலான மக்களை விடுதலைப் போரில் இழந்து நிற்கிறோம்! தமிழகமெங்கும் குடியினால் மனநலனும் உடல்நலனும் குன்றிய ஒரு கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களைக் காண்கிறோம்! சிறுதிரையும் பெருந்திரையும் விதைக்கிற பண்பாட்டுச் சீரழிவுகளுக்கு பல்லாயிரம் மக்கள் பலியாகிக் கிடப்பதைக் காண்கிறோம்! மொழியின் சீர் இழந்து போலிகளின் வெற்று ஆர்ப்பரிப்பில் மயங்கிக் கிடக்கிறோம்! தமிழர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வரஇயலா இழிநிலையில் தவிக்கிறோம்! வணிகமும் பொருளியலும் வந்தேறிகளிடம் சிக்கித் தமிழர்கள் பெரும்பாலும் எடுபிடிகளாகவும், தொண்டர்களாகவும் இருப்பதையேக் காண்கிறோம்! தன் மக்களுக்கு அரணாக, குரலாக, அரவணைப்பாக இருக்க வேண்டிய தாய்த் தமிழக மண்ணும் மானமும் திராவிடத்தால் வீழ்ந்து கிடக்கிறது! என்னே கொடுமை இது!
கேரள வனத்துறையினர் சுற்றுலா போன தமிழ்ப் பெண்களை நிர்வாணமாக்கி வதை செய்து படம் எடுத்து இணையத்தில் உலா விடுகிறார்கள்! தமிழகம் தூங்கிறது. பல காலமாக அங்கு இப்படித்தான் நடக்கிறது, ஆனால் வெளியே சொல்ல அஞ்சுகின்றனர் என்கிறார்கள்! கர்நாடக எல்லையிலும் பேருந்துகளில் தமிழ்ப் பெண்கள் நிம்மதியாகப் பயணம் செய்ய இயலாது! கன்னடக் காடையர்களின் சீண்டலுக்கு உள்ளாகி அடங்கி ஒடுங்கிப் போக வேண்டியதாயிருக்கிறது! ஆக, சிங்கள் உயிரைக் கொன்றான், கற்பைத் தின்றான் என்பது மட்டுமல்ல உண்மை! இந்திய இறையாண்மையின் அங்கங்களும் சொந்தங்களும் தமிழர்களுக்கும் தமிழச்சிகளுக்கும் இழைக்கிற கொடுமைகள் பதிவு செய்யப்படாமல் அழிந்து போகின்றன!
நடிகை ரம்பாவின் திருமணத்திற்குப் போகிறார் கருணாநிதி! ரசினிகாந்தின் மகள் திருமண அறிவித்தல் நிகழ்விலும் இருக்கிறார்! குசுப்புவை இழுத்துப் போடுகிறார், (தி.மு.க.விற்கு)! ஆனால், தமிழகப் பெண்கள் மலையாள வனத்துறையினரால் மானபங்கப்படுத்தப்பட்டதற்கு அவர் கண்டனம்கூடத் தெரிவிக்கவில்லையே! திராவிடத்தின் தலையாய முதலீடு கூத்து! வடுகக் கூத்து!! கேரளத்து நம்பூதிரிகள், தமிழகத்துப் பிராமணர்கள், (பார்ப்பனர்கள் அல்லர்) வடுகர்கள் ஆகியோருக்கிடையில் இந்தக் “கூத்து முதலீடு” பரவலாகவும் அதுவே மற்றவர்களின் (குறிப்பாகத் தமிழர்களின்) பலவீனமாகவும் இருந்திருக்கிறது! அம்மாதிரியான கூத்தின் நீட்சிதான் வெள்ளித் திரையுக் கூத்தும், சின்னத் திரைக் கூத்தும்! கன்னடப் பிராமணரான் பாலச்சந்தரின் படங்களில் திணிக்கப்பட்ட வக்கிரங்கள் எல்லாம் வடுகத்தின் நீட்சிதான்! கருணாநிதியின் பிறங்கடைகள் மிகத் தெளிவாக இன்றும் பல்வேறு சின்னத் திரை நிறுவனங்களை உருவாக்குவதிலும் வெள்ளித்திரை உலகை விழுங்குவதிலும் கருத்தாகக் கவனமாக இருப்பது உன்னிப்பாய்க் கவனிக்கத் தக்கது! உருவம் வேறுபடுகிறது! உள்ளடக்கம் அன்றும் இன்றும் ஒன்றுதான்! “சதையால் சிதை!” என்னும் எளிய உத்தி! வடுகச் சின்னத்தனம் தமிழ்ப் பண்பைச் சூறையாடிவிட்டது! அதனால்தான், தமிழ்ப் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்ட செய்தி திராவிடங்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை! ஆனால், திராவிட நரகலில் ஊறிப்போன தமிழிளம் காளையரும் கடுப்பாகி களம் இறங்கவில்லையே! இது வருத்தத்திற்குரியது! காரணம், நச்சுத் திராவிடம் சிரசுக்கு ஏறிவிட்டது! திராவிடப் பித்து வீரமுள்ள தமிழ் இளைஞர்களை முடக்கிப் போட்டிருக்கிறது! ஆனால் பித்தம் தெளிய மருந்தொன்று உண்டு! நாவில் தமிழ் என்னும் அமுதத்தையும், நடுநெஞ்சில் தமிழர் தேசியம் என்கிற அருமருந்தையும் அள்ளிப் பருகினால் நோய் நீங்கும்! திராவிடம் என்ற புரையோடிப்போன புற்றுநோய் இருந்த இடம் தெரியாது அகலும்! திரிவடுகரின் அடிவயிற்றை கலக்கோ கலக்கு என்று கலக்குவது இவை மட்டுமே!! தமிழனுக்கு ஒரு தேசம் என்று தும்மினாலேயே வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு வந்தேறிகள் குரைக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.
எதிரும் புதிருமாய் இருப்பதுபோல நாடகமாடும் திராவிடனும் பிராமணனும் கைகோர்த்துக் கொள்கிறான். உற்றுப் பாருங்கள் கருணாநிதிக்கும் சோவுக்கும் செயலலிதாவுக்கும் ஒரே கொள்கைதான் இருக்கிறது! இவர்கள் மறைத்துச் செய்வதை அவர்கள் வெளிப்படையாயும் அவர்கள் மறைத்துச் செய்வதை இவர்கள் வெளிப்படையாயும் செய்வார்கள்! தமிழ்த்தேசியத்தைக் கழுத்தறு என்று சோ வெளிப்படையாகச் சொல்லுவார்! கருணாநிதி கமுக்கமாய் காரியம் செய்வார்! தினமலரும், தினமணியும் பிராமணக் கொடுக்கிலிருந்து நச்சை கக்குகிறது! கருணாநிதியின் காவல்துறை தடி தண்டலோடு வந்து உருட்டி மிரட்டி கைது செய்கிறது! திராவிடங்களைப் பொறுத்தமட்டில் தமிழ்நாடு என்பது வந்தேறிகளின் வேட்டைக்காடு! வேலியில்லா நாடு! திராவிட நாடு! வந்தவரெல்லாம் மேயலாம்! ஆனால், தமிழ், தமிழ்த் தேசம் என்பதோ எல்லை வரையறுக்கும் வேலை! வேலியில்லா காட்டுக்கு வேலி போட்டால் எந்த நாடோடிக்குப் பிடிக்கும்?உறவில் தாலிகூட ஒரு வேலிதான்! கூத்தாடிகளுக்கும் குலத்தாசிகளுக்கும் தாலி என்பது குத்தத்தான் செய்யும்! குமுறத்தான் செய்வார்கள்! சீமானை, நெடுமாறனை, வைகோவை அடைத்து வைத்து தமிழ்த் தேசிய குமுறலை குன்ற வைத்துவிடலாம் என்பது சீப்பை ஒளித்து திருமணத்தை நிறுத்திவிடலாம் என்று நினைக்கிற அதி நுட்ப அறிவு!
கடல் அலைகளைச் சிப்பிக்குள் அடைத்துச் சிறைபிடித்துவிடலாம் என்கிற நப்பாசை!
சிறை வாழ்வு, ஆதிக்க அடக்குமுறை ஆகியன விடுதலை நாற்றுக்கு நல்ல எரு என்பது காலாகாலமாக வரலாறு சுட்டும் பாடம்!
தமிழகமும் அதையே மெய்ப்பிக்கப் போகிறது!

No comments:

Post a Comment