Saturday, June 16, 2012

தமிழர் களம் - கூட்டணி அல்ல கூத்தணி! - அரிமாவளவன்


தமிழர் களம் - கூட்டணி அல்ல கூத்தணி! - அரிமாவளவன்

அரசியல்வாதிகள் இழந்த ஆட்சியை கைப்பற்றுவதிலும் இருக்கிற ஆட்சியைத் தக்க வைப்பதிலும் குட்டிக்கரணம் போட்டு முயற்சிக்கிறார்கள். தமிழர்களோ உரிமை அரசியல் என்ற உயரிய இடத்திலிருந்து சறுக்கி சலுகை அரசியல் என்ற சகதியில் சிக்கி இன்று இலவய அரசியல் என்ற சாக்கடைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இந்தச் சாக்கடைகூட பலருக்குச் சுகமாக இருக்கிறது!
"மிக்சி, கிரைண்டர், 35 கிலோ அரிசி ஆகியன இலவயம்" என்று கருணாநிதி தனது கட்சித் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபோது அவர் முகத்தில் ஓடிய சிரிப்பலையும் அதைக் கேட்டுக் கொண்டிருந்த அப்பாவி மக்களின் கரவொலி அலையும் ஒரு விலங்காண்டி உலகின் உச்சத்தில் இருக்கிறோம் என்று கருதத் தோன்றியது. இந்தக் கோமாளித்தனத்தை எதிர்கொள்ள செயலலிதா இதற்கு ஒரு படி மேலே போயுள்ளார். மேற்கு வங்கத் தேர்தலில் போட்டியிடும் திரினாமுல் காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் எந்த இலவயத் திட்டமும் இல்லை! பொறாமையாக இருக்கிறது. மின்சாரம் இல்லாத தமிழ்நாட்டில் கருணாநிதி மிக்சிக்குப் பதிலாக ஆட்டுக்கல்லையே அன்பளிப்பாகக் கொடுத்துவிடலாம்! அ.தி.மு.க அறிக்கையில் "அவர் தருகிற ஆட்டுக்கல் என்னடா ஆட்டுக்கல்? காலை தோறும் ஒரு லிட்டர் ஆட்டிய தோசை மாவு இலவயம்" என்று அறிவித்தாலும் வியப்படையப் போவதில்லை. கு.ப.கிருட்டிணன் போன்றவர்கள் தோசைமாவு ஒப்பந்தத்தை எடுத்து ஒரு கை பார்த்தாலும் பார்த்துவிடுவார்கள்.
கருணாநிதி சொல்லும் ஒரு மாவரைக்கும் எந்திரத்தின் விலை 2000 ரூபாய் என்றும் அதற்காக இரண்டு கோடி எந்திரங்களைத் தமிழக அரசு வாங்குகிறது என்றும் வைத்துக் கொள்வோம். இதற்கு நாலாயிரம் கோடி ரூபாய் வேண்டும். இதைக் கருணாநிதி தன சொந்தப் பணத்திலிருந்தா கொடுக்கப் போகிறார்? அல்லது இவர்கள் அதிகாரத்திலிருந்தபோது அடித்த கொள்ளையிலிருந்து தரப்போகிறார்களா? அரசியல்வாதி தன சொந்தப் பணம் என்று கணக்குக் காட்டி வைத்திருக்கிற சொத்தும் ஊழல் வழியாக மறைவாக குவித்து வைத்திருக்கும் பணமும் உண்மையில் மக்களுடையனவே! ஆனால் கடலுக்குள் வீசிய கருங்கல் எப்படி மிதக்காதோ அதுபோல அடித்த கொள்ளைப் பணம் இப்போது திரும்பாது. "கடலை வற்றவைத்து கருங்கல்லை மீட்டால்தான் உண்டு"! அப்படியானால் இந்த 4000 கோடி எங்கிருந்து வரப்போகிறது? இதே அப்பாவி மக்களிடமிருந்தே வரும்! உப்பு, மிளகாய், புளி, பீடி, சுருட்டு என்று அத்தனைக்கும் வரியை உயர்த்தி பல்லாயிரம் கோடியை மீண்டும் சுருட்டிவிட்டு அதிலிருந்துதான் 4000 கோடியை மக்களுக்கு எலும்புத் துண்டு போல வீசி எறிவார்கள்! "ஒரு சேலை வாங்கினால் ஒரு சேலை இலவயம்" என்று விற்கிற மார்வாடி தன சொந்தக் காசிளிருந்தா உங்களுக்குக் கொடுக்கிறான்? நேற்றுவரை 100 ரூபாய்க்கு விற்ற சேலைக்கு இன்று 300 என்று விலை வைப்பான். இன்னொரு சேலையை இலவயம் போலக் கொடுப்பான். ஒரு சேலையின் அடக்க விலை 50 ரூபாயாகத்தான் இருக்கும். நேற்றுவரை ஒரு சேலைய 100 ரூபாய்க்கு விற்றபோது மார்வாடிக்கு 50 ரூபாய் லாபம் என்றால் இப்போது இலவய அறிவிப்பின்போது 200 ரூபாய் லாபம் கிடைக்கிறது. அந்த 200 ரூபாயும் உன் கையிலிருந்தும் பையிலிருந்தும்தான் போயிருக்கிறது. இந்த மார்வாடிக் கணக்குகளைத்தான் இந்த வந்தேறி வடுகக் கட்சிகள் அப்படியே பிடித்துக் கொண்டு தேர்தல் களத்தில் அவிழ்த்து விட்டிருக்கின்றன.
அரசியல் கட்சிகளின் இலவய அறிவிப்புகள் என்பன மோடி வித்தை செய்து மக்களிடமிருந்து அடிக்கிற கொள்ளை, அவ்வளவுதான்! தறுதலைகளின் தரந்தாழ்ந்த அரசியல் உத்திகள் இவை! மக்களை மடையர்களாகப் பாவிக்கும் பகற் கொள்ளையரின் சித்து விளையாட்டு! திராவிடக் கட்சிகள் உங்கள் கண்ணெதிரே மக்களாட்சியைப் படுகொலைச் செய்கின்றன. "காசுக்கு வாக்கு, இலவயங்களுக்கு வாக்கு" என்று நமது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் இருளுக்குள் தள்ளுகின்றன! இலவயங்கள் என்பன ஒரு யானையை வீழ்த்த வேடன் வெட்டி வைத்திருக்கும் குழி! இல்லை தழைகளை அதன் மீது பரப்பி வைத்திருக்கிறான். அது, பாடித் திரியும் பறவைகளைப் பிடிக்க வேடன் விரித்திருக்கும் வலை. சில தானியங்களை அதன் மீது தெளித்து வைத்திருக்கிறான். அது, பாடித் திரியும் பறவைகளைப் பிடிக்க வேடன் விரித்திருக்கும் வலை. சிலை தானியங்களை அதன் மீது தெளித்து வைத்திருக்கிறான். யானை போன்ற வலிமை உடைய தமிழரே, இல்லை தழைகளுக்குக் கீழே தெரிகிற பள்ளத்தைப் பாருங்கள். விடுதலை வானில் விரிந்த சிறகுகளோடு பறக்க வேண்டிய தமிழர்களே, தானியங்களுக்கு மேலே விரிக்கப்பட்டிருக்கும் வலையைப் பாருங்கள்! தேர்தலுக்கு முன்பாக ஒரு 100 பாமர மக்களிடமாவது இந்த எளிய கருத்தை விதைத்து அவரை விழித்துக் கொள்ளச் செய்தால் நாட்டுக்கு நீங்கள் நல்லது செய்திருக்கிறீர்கள் என்று பொருள்.
கூட்டணி அல்ல கூத்தணி!
கடைசி நேரம்வரை எந்தக் கட்சி யாரோடு கூட்டணி என்று யாருக்குமே தெரியாது! பேரங்கள் படியும்வரை பேச்சுவார்த்தைகள் நடந்தன! பேரங்கள் படிந்து இரு அணிகளான பிறகு கொள்கைக் குன்றுகள் போல மேடைகளில் முழங்கத் தொடங்குகிறார்கள். ஒரு கையில் மாட்டுப் பேரம், மறு கையில் கத்தி! பேரம் படிந்தால் கூட்டணி! பதியாவிட்டால் ஒரே குத்து! சீமானை இழுத்துக் கொண்டு அம்மாக் கூத்தணியில் சேர்த்த வைகோ இரு மாத ஓய்வில் இருக்கிறார்!
தேர்தலிலும் பல உள்குத்துகள் இருக்கும்! ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், "உதயசூரியனில்தான் குத்தினேன்" என்று சொன்னால் நம்பித்தானே ஆக வேண்டும்! திமுகவினரெல்லாம் மனமுவந்து காங்கிரசின் கைச் சின்னத்தில் குத்திவிட்டால் தேர்தலுக்குப் பிறகு திமுகவை உண்டு இல்லை என்று பண்ணிவிட மாட்டார்களா? அதே போலத்தான் விசயகாந்துக்கும் செயலளிதாவுக்குமான கூத்தணி உடன்பாடுகள்!
அப்பாவி மக்களை அடிமைகளாக அள்ளிக்கொள்ள அரக்கர்கள் அடித்துக் கொண்டு மோதும் இந்தத் தேர்தல் களத்தில் வழக்கம்போல தமிழ்த் தேசிய அமைப்புகள் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு விழி பிதுங்க வேடிக்கை பார்க்கின்றன! திரு. நெடுமாறன் தலைமையில் தேர்தலைத் துணிந்து சந்திப்போம் என்று முனைப்புக் காட்டிய பெரும்பாலான அமைப்புகள் ஒருகட்டத்தில் சோர்ந்து போயின! இறுதியில் கடந்த மார்ச் திங்கள் ஆறாம் நாள் தமிழர்களத்தின் முயற்சியால் ஒருங்கிணைக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் தமிழர் தேசிய முன்னணி என்ற அமைப்பை உருவாக்கித் தேர்தல்களம் இறங்கியிருக்கிறது. "234 லிலும் நாங்களே வெல்வோம்!" என்ற போலித்தனமான மாயைகளை விடுத்து வந்தேறித் திராவிடத் திருடர்களின் முகத்திரைகளைக் கிழிக்கவும் இந்தி தேசிய எத்தர்களின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்கவும் தமிழர் தேசிய அரசியலை மக்கள் நடுவில் அறிமுகப்படுத்தும் அச்சாரமே இந்த அறிமுகம்.
வல்லாதிக்கத்திர்கான அரசியல் காங்கிரசு போன்ற கட்சிகளின் இந்தி தேசிய அரசியல் என்றால் வந்தேறிகளின் அரசியல் திராவிடத் தேசிய அரசியல். ஆனால், உங்களுக்கான அரசியல்தான் தமிழர் தேசிய அரசியல்! யார் வெல்ல வேண்டும் என்பதை நீங்களும் காலமும் கலந்தாலோசித்துச் சொல்லுங்கள்.

No comments:

Post a Comment